வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு, பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் சரக துணை காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், “சட்டவிரோத வீடியோக்கள் இணையத்தில் பரவும் வேகத்திலேயே, சட்டமும் செயல்பட வேண்டும்” என்று நீதிபதி இதில் மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.


வழக்கின் பின்னணி:
மனுதாரரின் சகோதரி சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். சில சமூக விரோதிகள் அவரது புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து (Morphing) இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்தப் படங்களை அகற்ற வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படாததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றத்தில் வாதம்:
மனுதாரர் தரப்பில், “நேரடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டிய குற்றம் நடந்தும் போலீஸார் FIR பதியவில்லை. சைபர் குற்றங்களில் காலதாமதம் ஏற்பட்டால் டிஜிட்டல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும். குற்றவாளிகளின் இணைய முகவரிகள், சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி, அவை மேலும் பரவாமல் தடுக்க காவல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. அரசுத் தரப்பில், புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
நீதிபதியின் சாட்டையடி கருத்துகள்:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
சாதாரண குறும்பு அல்ல: புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது சாதாரண டிஜிட்டல் குறும்பு அல்ல; அது ஒரு பெண்ணின் நற்பெயர், தனியுரிமை மற்றும் மனநல பாதுகாப்பின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்.
தொழில்நுட்பத்தின் அவலம்: மனித கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டிய தொழில்நுட்பம், இன்று வெளிநாட்டில் வாழும் ஒரு பெண்ணின் தனி உரிமை மற்றும் மன அமைதியைச் சீர்குலைக்கும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது.
வேகம் தேவை: சைபர் குற்றங்களில் காலதாமதம் செய்தால் ஆதாரங்கள் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, சட்டவிரோதப் பதிவுகள் இணையத்தில் எந்த வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் சட்டமும் பாய்ந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பூரில் இருப்பதால் இந்தியச் சட்ட அமைப்புகளின் கடமை குறைந்துவிடாது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்:
திண்டுக்கல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் இந்தப் புகாரை முறையாகப் பரிசீலித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமூக ஊடக அமைப்புகளிடமிருந்து டிஜிட்டல் ஆவணங்களைச் சட்டப்படி உடனே பெற்றுப் பாதுகாக்க வேண்டும். இணையத்தில் உள்ள அந்த ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அகற்றவும், தடை செய்யவும் தேவையான போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசாரணையின் போது மனுதாரரின் வாக்குமூலத்தையும், சிங்கப்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைக் காணொளி (Video Call) வாயிலாகவும் பதிவு செய்ய வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த 4 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
