ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2026) டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ.சிதம்பரம் மைதான வளாகத்தில் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஏலம் மற்றும் போட்டி அட்டவணை குறித்த விபரங்கள் வருமாறு:


4 பிரிவுகளில் 783 வீரர்கள்:
நடப்பு 2026-ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதிலும் இருந்து 783 உள்நாட்டு வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வீரர்கள் பங்கேற்பதால், ஏல நடைமுறையை எளிதாக்கும் வகையில் வீரர்கள் அனைவரும் அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நான்கு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தற்பொழுது ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.
8 அணிகள் தீவிரம்:
இந்தத் தொடரில் பங்கேற்கும் திருச்சி கிராண்ட் சோழாஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐ ட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீக்கம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், தலைமைப் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) உள்ளிட்டப் பலரும் சேப்பாக்கம் மைதான வளாகத்தில் முகாமிட்டு, தங்களுக்குத் தேவையான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யப் போட்டிப் போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.
இரண்டு கட்டங்களாகப் போட்டிகள் (Phase 1 & Phase 2):
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான போட்டி நடைபெறும் தேதிகள் மற்றும் மைதான விபரங்களையும் டிஎன்பிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தொடரின் முதல் கட்டப் போட்டிகள் (Phase 1) திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள என்.பி.ஆர் (NPR) கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட மற்றும் நாக்-அவுட் போட்டிகள் உள்ளடங்கிய இரண்டாம் கட்டப் போட்டிகள் (Phase 2), சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை மின்னொளியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏலம் தற்பொழுது இறுதிவட்டத்தை எட்டியுள்ளதால், எந்தெந்த முன்னணி வீரர்கள் எந்த அணிக்குச் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
