Homeசெய்திகள்அரசியல்தமிழக அரசியல் களமும் திராவிடக் கட்சிகளின் எதிர்காலமும்: ச. சோமசுந்தரம் அலசல்!

தமிழக அரசியல் களமும் திராவிடக் கட்சிகளின் எதிர்காலமும்: ச. சோமசுந்தரம் அலசல்!

-

- Advertisement -

“திமுக, அதிமுக என்கிற மாபெரும் கட்சிகளை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தகர்த்து, தரைமட்டமாக்கி, தூள் தூளாக்கிவிட்டு விஜய் முதலமைச்சராக இருக்கிறார்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் இரு பெரும் தூண்களாக விளங்கும் திராவிடக் கட்சிகளின் தற்போதைய நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை தள்ளியிருக்கிறது.

தமிழக அரசியல்

we-r-hiring

அதிமுகவின் கொள்கையற்ற அரசியலும் சரிவும்:

தமிழக தேர்தல் வரலாற்றில், ஒருமுறை தோல்வியடைந்தால் அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கும் அசாத்திய பலத்தைக் கொண்டிருந்தது அதிமுக. ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு அந்த வரலாறு மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாமல் தவிக்கும் நிலை அந்தப் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையில், அதிமுகவினருக்கு என்று ஆழமான கொள்கைகள் கிடையாது. அவர்களுக்குத் தேவை கவர்ச்சி மிக்க ஒரு தலைமை, சரியான நேரத்தில் பணம், பதவி, அதிகாரம் மட்டுமே.

இவை இருந்தால் அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவிகளைப் பெற்றுக்கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார்கள். ஆனால், தொடர் தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் தற்போதைய அதிமுகவினரிடம் இல்லை. இந்த விரக்தியின் காரணமாகவே, இன்று மீண்டும் ஒரு திரைக்கவர்ச்சி பிம்பத்தின் பின்னால் (நடிகர் விஜய்) அவர்கள் ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். இதைத்தான் வைகோ தன் பாணியில், “அதிமுகவை விஜய் தரைமட்டமாக்கிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொள்கைப் பலமும் திமுகவின் ‘குடும்ப’ வேர்களும்:

திமுகவின் அரசியல் முற்றிலும் வேறானது. திராவிடக் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம், மதச்சார்பற்ற அரசியல், சனாதன எதிர்ப்பு போன்ற கொள்கைகளைத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தது திமுக. பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் திமுக என்றும் உயிர்ப்புடன் இருக்கும். ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கான இயக்கம் அல்ல; மாறாக, தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் உறுப்பினர்களால் நிறைந்திருக்கும் இயக்கம்.

அந்த வகையில் பார்த்தால், திமுக என்பது உண்மையாகவே ஒரு ‘குடும்பக் கட்சி’ தான்—ஏனெனில் தொண்டர்களின் குடும்பங்கள் தான் அதன் வேர்கள்! அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என்ற மூன்று அத்தியாயங்களைக் கடந்த திமுகவினர், தங்களது குடும்ப உணர்வோடு நான்காவது அத்தியாயத்திற்கான தலைவரையும் (உதயநிதி ஸ்டாலின்) தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

திமுகவின் பலவீனமும் சரிசெய்ய வேண்டிய தருணமும்:

இருப்பினும், திமுகவின் மிகப்பெரிய பலவீனமாக இருப்பது அதன் மாவட்டப் பொறுப்பாளர்கள் (மாவட்டச் செயலாளர்கள்) தான். திமுக ஆளுங்கட்சியாக வரும்போதெல்லாம், மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கம் எல்லை மீறிப் போவது கலைஞர் காலம் தொட்டு, தற்போதைய ஸ்டாலின் காலம் வரை தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சரியான நேரம் இதுதான். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டு, அதற்கு ஒரு முடிவைக் கட்டுவாரேயானால், அடுத்த பத்தாண்டுகளுக்கு திமுகவின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. திமுகவின் உட்கட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் துல்லியமாக இருக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டு மக்கள் எந்தவொரு கவர்ச்சி பிம்ப நடிகர்களின் பின்னாலும் சென்று வாக்களிக்க மாட்டார்கள் என்பது ஆணித்தரமான உண்மை.

அழிக்க நினைத்தவர்கள் அழிந்த வரலாறு!

வைகோ பேசியது போல் திமுகவை யாராலும் தரைமட்டமாக்கவோ, தூள்தூளாக்கவோ முடியாது. அன்று ராஜாஜி முதல் இன்று விஜய் வரை திமுகவை அழிக்கப் பார்த்தவர்கள் தான் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்களே தவிர, திமுக அல்ல. அதேபோல், விஜயையும் ஒரு நாள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசியல் சூழ்நிலைகள் திமுகவிற்கு நிச்சயம் உருவாக்கிக் கொடுக்கும்; அதைச் சரியாகப் பயன்படுத்தி திமுக தன் அரசியலை முன்னெடுக்கும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் திமுகவை அரசியல் ரீதியாக ‘தீய சக்தி’ என்று விமர்சித்தார்களே தவிர, அதை முற்றிலும் அழிக்க முயலவில்லை. அதனால்தான் அவர்கள் அரசியலில் தொடர்ந்து வெல்ல முடிந்தது. ஆனால் வைகோ, விஜயகாந்த், பாமக அன்புமணி, சீமான் போன்றவர்கள் திமுகவை அழிக்க நினைத்தார்கள்; அது முடியாமல் போன விரக்தியில் இப்போது அதிமுகவை அழிக்க முற்படுகிறார்கள்.

அதிமுக அழியுமா, இல்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திமுக என்றைக்கும் அழியாது. ஏனெனில் அது தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தோடு கலந்த ஓர் இயக்கம்!

MUST READ