தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பான வழக்கு மற்றும் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை தாக்கி உடைத்த வழக்கு ஆகியவற்றில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.-வுமான செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து, இருவரிடமும் தனித்தனியாக சுமாா் ஒன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


வழக்கின் பின்னணி:
தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமயன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட்டார்.
இதேபோல், கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை அடித்து உடைத்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இரண்டாவது நாளாக அதே காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
(குறிப்பிடத்தக்க வகையில், அசோக் குமார் தவெக பேரம் வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், அதற்கான பிணைப்பத்திரத்தை (Surety) இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கரூர் வழக்கு தொடர்பாக அவர் இரண்டு வாரங்களுக்குத் தினமும் காலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்பது நீதிமன்ற உத்தரவாகும்).
தனித்தனியாக 1.5 மணி நேரம் விசாரணை:
காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தவெக எம்.எல்.ஏ. பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது பல்வேறு முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் தூண்டுதலின் பேரிலேயே எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவ்வழக்கில் ஹவாலா பணப்பரிமாற்றம் (Hawala transaction) நடந்துள்ளதாகவும் காவல்துறை சந்தேகப்படுவது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி பேட்டி:
ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “தான் இப்போது எதுவும் பேச முடியாது; விசாரணை முழுமையாக முடிந்த பிறகு பேசுவதாகத்” தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
