அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக அரங்கேறிய உக்கிரமான 13 நாள் போர் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ள விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


90 நிமிட ரகசிய சந்திப்பும், நெதன்யாகுவின் அழுத்தமும்:
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நெதன்யாகு – ட்ரம்ப் சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு இஸ்ரேழுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதற்கு எப்பாடு பட்டாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் நெதன்யாகு தொடர்ந்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஓர்மூஸ் நீரிணையும், எண்ணெய் நெருக்கடியும்:
ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘ஓர்மூஸ் நீரிணை’ ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கான எண்ணெய் வணிகப் பாதையான இந்த நீரிணையைத் திறப்பது குறித்து ஈரான் தனது இறுதி முடிவை வெளியிடவில்லை.
அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை இந்த வழித்தடம் முழுமையாகத் திறக்கப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. போர் தொடர்ந்து நீடித்தால் உலக நாடுகள் கடுமையான எரிசக்தி (Energy Crisis) மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் ஆயுதத் தட்டுப்பாடும், ஈரானின் நீண்ட கால வியூகமும்:
அமெரிக்கா அதிநவீன மற்றும் அதிக செலவினைக் கொண்ட ஆயுதங்களை நம்பிப் போரை எதிர்கொண்டு வரும் நிலையில், போரின் தொடர்ச்சியால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறையத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், பொருளாதாரத் தடைகளைச் சமாளித்து, நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தயாரித்து வைத்துள்ள ஈரான், அமெரிக்காவின் பலவீனங்களைச் சரியாகக் கணக்கிட்டுத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையும் எதிர்கால சவால்களும்:
கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் ஓமான் வழியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
போர் முழுமையாக முடிவுக்கு வராவிட்டால் மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் அபாயம் தொடர்கிறது.
நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!
