“தமிழகச் சட்டப்பேரவையில் தவெக அரசு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ரூ.1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கோடு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் சீர்’ திட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.”
தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்சிக்கு வந்த 3 மாதங்களிலேயே முதலமைச்சர் விஜய் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், ‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரில் 10 தூண்களைக் கொண்ட தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடுகள் வருமாறு:
பொருளாதார தொலைநோக்கு & வருவாய் மேம்பாடு
- 1.5 டிரில்லியன் டாலர் இலக்கு: வறுமையற்ற தமிழ்நாட்டை உருவாக்கவும், வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தவும் தொலைநோக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாயைப் பெருக்க குழு: மாநிலத்தின் நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும் வருவாயைப் பெருக்கவும் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும்.
- கட்டிடமைப்பு நிதி: TNSHIC சிறப்பு நோக்கு நிறுவனம் ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் தொடங்கப்படும். மேலும், ரூ.10 கோடி செலவில் மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு கழகம் அமைக்கப்படும்.

சமூக நலன் & ‘தாய்மாமன் சீர்’ திட்டம்
- குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ முறைப்படி தொடங்கப்படும்.
- 200 யூனிட் இலவச மின்சாரம்: ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் மக்களின் மின்சாரக் கட்டண சுமை பெருமளவில் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,571 கோடி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மொத்தமாக ரூ.44,571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பள்ளி மேம்பாடு: மாநிலத்தில் உள்ள 3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சூப்பர் கிளீன் & சூப்பர் கேம்பஸ்: அரசுப் பள்ள தூய்மை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கான சலுகைகள்: 5.32 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள், தண்ணீர் பாட்டில் மற்றும் தலைக்கவசம் (Helmet) வழங்கப்படும்.
- போதை ஒழிப்பு நடவடிக்கை: பள்ளிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க ‘1058’ என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். போதை ஒழிப்பு விழிப்புணர்வு திட்டங்களுக்கு ரூ.7 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- பொது நூலகங்கள்: மாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களை மேம்படுத்த ரூ.10 கோடி செலவிடப்படும்.
- உயர் கல்வி & தொழிற்பயிற்சி
வெற்றி மடிக்கணினித் திட்டம்: கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,000 கோடி மதிப்பில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். - மதுரையில் புதிய சட்டக் கல்லூரி: 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் மதுரையில் புதிய சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.
- 25,000 வாகன மெக்கானிக்குகள்: மாநிலத்தில் 25,000 இளைஞர்களை வாகன மெக்கானிக்குகளாக உருவாக்க ரூ.3 கோடியில் சிறப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களுக்கு பேட்டரி பராமரிப்பு மற்றும் மின்சார வாகன (EV) பராமரிப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

மத்திய அரசுடனான கொள்கை நிலைப்பாடு
- நீட் தேர்வு ரத்து: தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நீட் (NEET) தேர்வை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என நிதி அமைச்சர் மரியா வில்சன் தனது பட்ஜெட் உரையில் உறுதியளித்தார்.

