தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், தாய்மொழியை எழுதப் படிக்கத் தெரியாதது பெருமை அல்ல, அது அவமானம் என்றும் பிரபல நடிகர் தனுஷ் கறாராகத் தெரிவித்துள்ளார்.


சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை நடிகர் தனுஷ் கல்வி பயின்றார். தான் படித்த பள்ளியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இப்பள்ளியில் தனது சொந்தச் செலவில் மூன்று தளங்களைக் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை அவர் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த புதிய கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ (Dhanush Block) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து நடிகர் தனுஷ் பேசியதாவது “இங்கிலீஷ் தப்புத் தப்பா பேசுவேன் – பள்ளி நினைவுகள்.
நான் இங்குப் படிக்கும் காலத்தில் எனக்கு ஆங்கிலம் சரியாக வராது; தப்புத் தப்பாகத்தான் பேசுவோம். ‘வை டிட் யூ வென்ட்’ (Why did you went) என்பது போன்ற ஆங்கிலத்தில்தான் அப்போது நான் பேசி வந்தேன். ஆனால், எனக்குத் தமிழ் நன்றாக வரும்” என்று தனது பள்ளிப் பருவ நினைவுகளை அவர் கலகலப்புடன் பகிர்ந்துகொண்டார்.
தாய்மொழியை மறக்கும் இன்றைய தலைமுறை
தற்காலச் சூழல் குறித்துக் கவலை தெரிவித்த அவர், இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. வெளியே பலரைச் சந்திக்கும் போது, பத்தில் எட்டு பேருக்குத் தமிழ் எழுதப் படிக்கவே தெரிவதில்லை. ஆங்கிலம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள்; ஆனால் தாய்மொழியான தமிழை எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. இது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் என்றார்.
வெளிநாட்டினர் பார்வை மற்றும் தனுஷின் கருத்து
பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புப் படம் ஒன்றிற்காக பெல்ஜியத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் தான் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தனுஷ், வெளிநாட்டினரின் மொழிப் பற்றைப் பாராட்டிப் பேசினார். அங்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டபோது, எனக்குத் தெரியும் என்றவுடன் அவர்கள் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உங்களுக்கு உங்கள் தாய்மொழிதானே முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் என்பது ஒரு போனஸ் தானே என்று கேட்டார்கள். அப்படிப் பார்க்கும்போது, உங்களுடைய தாய்மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அதைத்தான் நீங்கள் முதலில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
“தமிழை மறைப்பது பெருமையல்ல” இறுதியாகத் தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய நடிகர் தனுஷ், எனக்குத் தமிழ் வரல என்று சொல்வது பெருமையும் கிடையாது, அது ஒரு பிரைடும் (Pride) கிடையாது. ஒரு தாய்மொழி தெரியவில்லை என்றால் அது ஒரு அவமானம்தான். கண்டிப்பா தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
“என்னை ‘சார்’னு கூப்பிடாதீங்க, எனக்கு அவ்வளவு வயசாகல!” – மனம் திறந்த நடிகர் மாதவன் சிறப்புப் பேட்டி
