தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இதுகுறித்து மூத்த ஊடகவியலாளர் சுகிர்தா அவர்கள் ஊடகம் ஒன்றுக்குப் அளித்த பிரத்யேக பேட்டியில் விரிவான பொருளாதாரப் பகுப்பாய்வை முன்வைத்துள்ளார்.


பட்ஜெட் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும்:
திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் கால பட்ஜெட்டுகளுக்கும், தற்போதைய தவெகவின் பட்ஜெட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப சிக்னேச்சர் திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்
நடைமுறைச் சாத்தியங்களும் கேள்விகளும்:
தவெக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை என்று குறிப்பிட்ட மூத்த ஊடகவியலாளர் சுகிர்தா, பல திட்டங்கள் காகித அளவில் நன்றாகத் தோன்றினாலும், களத்தில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, பள்ளிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் உள்ள பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த நுட்பமான கேள்விகளை அரசியல் தலைவர்கள் எழுப்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார் 500 குழந்தைகளுக்கு ஒரு உடல் கல்வி ஆசிரியர் இருக்க வேண்டிய இடத்தில், எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் சுமையாக்குவது போன்ற நடைமுறைச் சிக்கல்களை அவர் விளக்கினார்
தரமா அல்லது எண்ணிக்கையா?
ஒரு மாநிலத்தின் பட்ஜெட் என்பது வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டும் இருக்கக்கூடாது என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முந்தைய திட்டங்களின் தொடர்ச்சியா, பெயர் மாற்றப்பட்ட திட்டங்களா அல்லது நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் அலசி ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் தரம் மற்றும் அளவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என அவர் தனது பேட்டியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தவெக அரசின் அடாவடி: திமுக சார்பில் வழக்கறிஞர் சூர்யா கடும் கண்டனம்!
