50% மானியத்தில் ட்ரோன்கள்: ரூ.2.50 கோடி நிதியுடன் புதிய திட்டம் – அமைச்சர் ஆர்.வினோத் அறிவிப்பு!
விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, பெண்களைப் தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றும் நோக்கில் “வெற்றி வான் மகள் படை” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ட்ரோன் (Drone) இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.


பெண்களை ‘ட்ரோன்’ இயக்கிகளாக மாற்றும் உயரிய நோக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை பட்ஜெட்டில், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், நவீன எந்திரமயமாக்கலை ஊக்குவிக்கவும் இப்புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100 மகளிருக்கு சிறப்புப் பயிற்சி & 50% மானியம்!
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ட்ரோன்களை பாதுகாப்பாகவும், திறம்படவும் இயக்குவதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
திட்டத்தின் முதன்மை அம்சங்கள்:
500 பேருக்கு பயிற்சி: தகுதியுள்ள 100 மகளிர் உட்பட மொத்தம் 500 விவசாய ஆர்வலர்களுக்கு ட்ரோன்களை இயக்கும் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
50% மானியம்: பயிற்சிக்குப் பிறகு, மகளிரே சொந்தமாக ட்ரோன்களை வாங்கி விவசாய சேவைகளில் ஈடுபடும் வகையில், 50 சதவீத மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கப்படும்.
நேரமும் உழைப்பும் சேமிப்பு: பயிர்களுக்கு உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் மற்றும் பயிர் வளர்ச்சியைத் தொலைதூரத்தில் இருந்து கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பெரிதும் பயன்படும்.

கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு!
விவசாயத்தில் ஆட்களற்ற ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நேரம் மற்றும் மருந்துகளின் விரயம் பெருமளவில் குறைக்கப்படும். மேலும், பயிற்சி பெறும் பெண்கள் தங்கள் கிராமங்களில் ட்ரோன்களை வாடகைக்கு விட்டுச் சுயதொழில் புரியவும், இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கணிசமாக உயரவும் இத்திட்டம் வழிவகுக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: ரூ.1.20 கோடியில் ‘தமிழ்நாடு தளிர்கிரைகள் திட்டம்’ அறிமுகம்!
