காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியையும், நாளைய சட்டமன்றக் கூட்டத்தில் எழவிருக்கும் கடுமையான கேள்விகளையும் எதிர்கொள்ளத் பயந்துவிட்ட தவெக அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மலிவான மற்றும் வக்கிரமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவசரக் கைது பின்னால் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி!
காலை 7 மணியளவில் தவெக அரசு காவல்துறையை ஏவி எதிர்க்கட்சித் தலைவரை அவசரமாகக் கைது செய்துள்ள நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்றங்களில் ரிமாண்ட் (சிறை காவலுக்கு அனுப்புவது) செய்யும் அளவுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், கைது என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவரை மணிக்கணக்கில் அலைக்கழித்து உளவியல் ரீதியாகச் சோர்ந்துபோகச் செய்வதே இந்த அரசின் உள்நோக்கமாக இருந்துள்ளது. அரியலூரிலிருந்து திருச்சி வழியாகத் திசை திருப்பித் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது, சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான சதித்திட்டமாகும்.

கர்நாடக விவகாரமும் தவெக அரசின் கோழைத்தனமும்!
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்கவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்று விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது, அதற்கான நிவாரணம் குறித்துப் பேசத் திராணியற்ற இந்த அரசு, அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புனையப்பட்ட பொய் வழக்குகள்!
எந்தவொரு கலவரத்தையோ அல்லது சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையையோ தூண்டும் வகையில் பேசாதபோதிலும், உள்நோக்கத்துடன் பல பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக, ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் உரிய முன் நோட்டீஸ் வழங்காமல் காவல்துறையைத் துஷ்பிரயோகம் செய்து இந்த அடாவடி கைது அரங்கேற்றப்பட்டுள்ளது.
சர்வாதிகாரப் போக்குக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
மக்களின் எழுச்சிப் போராட்டங்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் இந்த ‘ரீல்ஸ்’ அரசு, இதுபோன்ற ஜனநாயக விரோத அடக்குமுறைகள் மூலமாக திமுகவை முடக்கிவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றில் எவ்வளவோ நெருக்கடிகளையும் சர்வாதிகார ஒடுக்குமுறைகளையும் சட்டப்பூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் முறியடித்த இயக்கம் திமுக. தற்போதைய ஆட்சியாளர்களின் இந்த மலிவான அரசியல் நாடகங்களை மக்கள் மிக அருகில் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், இதற்கான பொருத்தமான அரசியல் மற்றும் ஜனநாயகப் பாடத்தை மக்கள் உரிய நேரத்தில் வழங்குவார்கள் என்றும் சூர்யா கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
