தமிழ்நாட்டில் உள்ள கனிம மற்றும் இயற்கை வளங்கள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தற்காலிகமாகத் தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். அதேவேளையில், இத்தடையால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறி கேரளா மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களின் எதிர்ப்பு

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படும் கல், மணல் மற்றும் கனிம வளங்களை நம்பியே கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தத் தடையை நீக்கக் கோரி கேரள முதலமைச்சர் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சுரண்டப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்
இயற்கை வளங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ள அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாக குவாரிகள் இயக்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலைகளும் சின்னச் சின்ன குன்றுகளும் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தமிழகம் கனிம வளங்களை வாரி வழங்கும் மாநிலமாகவே (Supply State) பார்க்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, நமது மலைகளையும் குன்றுகளையும் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக்கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தரத் தடைக்குக் கோரிக்கை
தற்போது தமிழக அரசு எடுத்துள்ள இந்தத் தற்காலிக முடிவு வரவேற்புக்குரியது என்றாலும், இது தற்காலிகத் தடையாக நின்றுவிடாமல் நிரந்தரத் தடையாக மாற்றப்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
மேலும், சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்வதுடன், கனிம வளங்களைத் திருட்டுத்தனமாகக் கடத்துவோர் மீதும், அதற்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் குண்டா சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

