தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக அகற்றும் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குற்ற வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) சாதிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதை சுட்டிக்காட்டி நீதிபதி என். ரமேஷ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
1978-ன் அரசாணையை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம்
வழக்கு விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்றம், தெருக்கள் மற்றும் சாலைகளில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று கடந்த 1978 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியது. இருப்பினும், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த உத்தரவு முழுமையான அளவில் அமல்படுத்தப்படவில்லை என்பதை நீதிமன்றம் மறைமுகமாக உணர்த்தியது.
இதுவே சரியான தருணம்
சமீபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையை ‘சமூக நீதித்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளதை உயர்நீதிமன்றம் பாராட்டின. இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கு இதுவே மிகச் சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.
தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தாமாக முன்வந்து (Suo Motu) பொதுநல வழக்காகப் பதிவு செய்து அதனைத் தலைமை நீதிபதி அவர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி என். ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவானது, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சாதி அடையாளங்களை அகற்றும் முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
