மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை வினோதினியின் (ஸ்வேதா) 2 சவரன் தாலிச் செயின் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் புகழ்பெற்ற ‘நாயகன்’ படம் தொடங்கி, பாலு மகேந்திராவின் ‘மறுபடியும்’, கே.எஸ். ரவிக்குமாரின் ‘சூரியன் சந்திரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வினோதினி. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ஸ்பா ஒன்றிற்கு மசாஜ் செய்யச் சென்றுள்ளார். அங்கு கழுத்துப் பகுதிக்கு மசாஜ் செய்வதற்கு ஏதுவாக, தனது கழுத்தில் இருந்த தாலிச் செயினைக் கழற்றி அங்கிருந்த ஒரு பெட்டியில் (Box) வைக்குமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்படியே அவரும் கழற்றி வைத்துள்ளார்.
வீட்டிற்குச் சென்ற பின் அதிர்ச்சி
மசாஜ் முடிந்ததும் ரிலாக்ஸ் மூடில் இருந்ததால், பெட்டியில் கழற்றி வைத்த தாலிச் செயினை அணியாமல் அவர் வீடு திரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவசரமாக ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்ததால், இரண்டு நாட்கள் கழித்துத் தான் தாலிச் செயின் கழுத்தில் இல்லாதது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.
உடனே அதிர்ச்சியடைந்த நடிகை வினோதினி, தான் சென்ற ஸ்பாவிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்களோ “எங்களுக்கு எதுவும் தெரியாது; நீங்கள்தான் கவனமாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும்” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
நடிகையின் குற்றச்சாட்டு மற்றும் எச்சரிக்கை
இதுகுறித்து வினோதினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நான் ஸ்பாவிலிருந்து கிளம்பும்போது என் செருப்பைத் தட்டில் வைத்து மரியாதையாகக் கொண்டுவந்து கொடுத்தவர்கள், டப்பாவில் பத்திரமாக வைத்த எனது தாலிச் செயினைத் திருப்பித் தரவில்லை. என்னைப்போல ஸ்பாவிற்குச் செல்லும் பெண்கள் தங்களது விலைமதிப்பற்ற நகைகளை மிகக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; முடிந்தவரை விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். எனது தாலி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து நடிகை வினோதினி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஸ்பாவில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மாயமான 2 சவரன் தாலிச் செயினைத் திருடியது யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!
