தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்கே செல்வமணி மூன்றாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு இணைந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் எந்தவிதப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை வடபழனியில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்கே செல்வமணி, திரைப்படத் துறையின் தற்போதைய சவால்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

திரைத்துறையின் தற்போதைய சவாலான சூழல்
ஆர்கே செல்வமணி தெரிவித்ததாவது: “எனது மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள 25 ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்களின் நலன் காப்பதும், அவர்களின் அடிப்படை வசதிகள், வேலைப் பாதுகாப்பு மற்றும் முறையான ஊதியம் ஆகியவற்றை உறுதி செய்வதும் எங்களின் முதன்மைக் கடமையாகும்.
தற்போதைய காலகட்டத்தில் தமிழ் திரைப்படத்துறை மிகவும் சவாலான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. சில பெரிய திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைக்கும் அதேவேளையில், பல சிறிய திரைப்படங்களால் திரையரங்குகளில் வெளியிடக்கூட முடியாத இக்கட்டான நிலை நிலவுகிறது. ஒரே திரைப்படம் ஆயிரக்கணக்கான திரையரங்குகளை ஆக்கிரமிப்பதும், சிறிய படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்குவதும் திரையுலகில் ஒரு பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது. இதனால் திரைத்துறையை நம்பியுள்ள அடிமட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.”
தமிழக முதல்வருக்கு முக்கியக் கோரிக்கைகள்
திரைத்துறையின் இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசுக்குச் சில முக்கிய வேண்டுகோள்களை அவர் முன்வைத்தார்:
திரைத்துறையைக் கட்டமைக்க முறைப்படுத்தப்பட்ட அமைப்பு: தமிழ் திரைப்படத்துறையை முறையாகக் கட்டமைத்து, ‘தமிழ் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்’ (Tamil Film Development Corporation) போன்ற அரசின் நேரடி அமைப்பின் கீழ் கொண்டு வந்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
தொழிலாளர் நிலம் மற்றும் அரசாணைத் திருத்தம்: திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பான நீண்டகாலச் சிக்கல்களைத் தீர்த்து, அந்த நிலத்தை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்க வேண்டும். மேலும், குத்தகையை வாரிசுகளுக்கு உரிமை மாற்றம் செய்யும் வகையில் அரசாணையில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
முதுமைக்கால ஓய்வூதியம்: 60 வயதைக் கடந்த சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க ஆவன செய்ய வேண்டும்.
தொழிலாளர்களின் நலனுக்கே எனது முன்னுரிமை “எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தது இந்தத் சினிாதான். இன்று அந்தத் தொழிலாளர்கள் சிரமப்படும் காலத்தில் அவர்களுக்கு உதவி செய்யும் இடத்தில் என்னை இறைவன் வைத்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்”
திரைத்துறையில் திருப்புமுனை: அக்டோபர் 15-ல் உலகமெங்கும் வெளியாகிறது ‘ஜெயிலர் 2’!
