தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ (SDPI) கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வனத்துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம்
“தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 மலைக் கிராமங்களில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக வசித்து வரும் விவசாயிகளையும் பழங்குடியின மக்களையும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக் கூறி வெளியேற்றத் துடிக்கும் வனத்துறையின் அராஜக நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்ட சூழலில், அங்குத் தலைமுறை தலைமுறையாக வசித்து இலவம், முந்திரி, மிளகு, ஏலம் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் உழைக்கும் மக்களைத் தங்களின் சொந்த மண்ணிலிருந்தே அகதிகளாக மாற்ற முயல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.”
‘வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும்’
மேலும் தனது அறிக்கையில், “2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி, பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் சட்டப்பூர்வமான உரிமையாகும். சட்டப்படியான இந்த உரிமையை வழங்க மறுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் வனத்துறை செயல்படுவது வேதனையளிக்கிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக இப் பிரச்சினையில் தலையிட்டு, வனத்துறையின் கெடுபிடிகள் மற்றும் கெடுபிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். 100 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத் தேவையான வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டாக்களை வழங்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு
வனத்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்தும், தங்களின் நியாயமான வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்கவும் வருசநாடு மற்றும் மேகமலைப் பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நெல்லை முபாரக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே கல்லில் 2 மாங்காய்! திருவாரூர் குளத்தில் சென்னை ஐஐடி செய்த ‘அதிசயம்’.. டெல்டா வாசிகள் உற்சாகம்!
