காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், இளைஞர்கள் இருவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ந்த விபரம்:
காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாகத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற இருந்தது. விழாவின் முதல் நாளான நேற்று, பொன்னியம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் இரவு சாமி வீதியுலா தொடங்குவதற்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதீத போதையில் ஒலிபெருக்கியில் கானா பாடலை ஒலிக்கச் செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

கைகலப்பும் முன்விரோதமும்:
போதையில் இளைஞர்கள் செய்த செயலால் அங்கு கூடிருந்த பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசாருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கிருந்து தற்காலிகமாகச் சென்றுள்ளது.
இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவரையும் குறிவைத்த அந்த போதைக்கும்பல், முன்பகை காரணமாக அவர்களைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த சந்துரு மற்றும் விக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினர்களின் போராட்டம் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம்:
கோவில் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கொலைச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொன்னேரிக்கரை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முற்பட்டனர்.
அப்போது, கொலையுண்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலைக் எடுக்கத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் திருவிழாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே இந்த இரட்டைக்கொலைக்குக் காரணம் எனக் கூறி, அவர்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பர்கூர் மலைப்பாதையில் கரும்பு லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!
