தனது தனிப்பட்ட வாழ்க்கை உற்றுநோக்கப்படுவதும், அது தொடர்பாக எழும் கடுமையான விமர்சனங்கள் குறித்தும் முன்னணி இளம் நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகத்தின் தமிழ் பதிப்பு தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துருவ் விக்ரமிடம், திரையுலகில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும், அதன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

“பாதிக்கவில்லை என்று சொல்ல முடியாது”
அதற்கு மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்த துருவ் விக்ரம், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதுபோன்ற விமர்சனங்கள் நம்மைப் பாதிக்கவில்லை என்று பொய் சொல்ல முடியாது. நிச்சயமாகப் பாதிக்கத்தான் செய்கிறது. இருப்பினும், இந்தத் திரையுலகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாதுகாக்க வேண்டியவை குறித்துத் தெளிவு
தொடர்ந்து பேசிய அவர், “நாம் யார்? நமக்கான விஷயங்கள் என்ன? என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும். அதேபோல் நமக்கு எது முக்கியமானது, நாம் நேசிக்கும் மனிதர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும்போதும், நமது இலக்கு மற்றும் முடிவுகளில் தெளிவு இருக்கும்போதும் இந்த விமர்சனங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
அதே நேரத்தில், இது நமது தனிப்பட்ட பலத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் நமது சொந்த உலகில் உழைக்கிறோம்; அதனால் முடிந்தவரை நமக்குப்பிடித்த விஷயங்களைப் பாதுகாப்போம்” என்று உறுதியாகக் கூறினார். ‘ஆதித்யா வர்மா’ படம் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் வரை தனது தனித்துவமான நடிப்பால் கவனத்தைப் பெற்ற துருவ் விக்ரம், தற்போது கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில், விமர்சனங்கள் குறித்து அவர் அளித்துள்ள இந்த முதிர்ச்சியான விளக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
