நடிகர் ஜித்தன் ரமேஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபர்ஹானா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிள் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ர்ஹானா‘. ஜித்தன் ரமேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் படம் குறித்த சுவாரசிய தகவல்களை ஜித்தன் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
“ஜித்தன் படத்தை தாண்டி எனக்கு ஒரு பிரேக் கிடைக்கவில்லை. ஆனால் பர்ஹானா படத்தில் அது நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் நெல்சன் வெங்கடேசன் அவ்வளவு சூப்பரான படத்தை இயக்கியிருக்கிறார். படம் வெளியாகும் போது பல விமர்சனங்கள் கண்டிப்பாக வரும். ஆனால் கதையில் அப்படி எதுவுமே இல்லை. படத்தில் ஒரு தப்பான காட்சி கூட இருக்காது.
நான் தவறான கதைகளை தேர்வு செய்தது என்னுடைய சரிவுக்கு காரணம் என நினைக்கிறேன். கடந்த 6 வருடங்களாக எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை. அதனால் தான் பிக்பாஸ் போனேன், அதை அடுத்தும் சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவற்றை செய்தேன்.

பாலா சார் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் நானும் ஜீவாவும் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் நாங்கள் இருவரும் மாற்றப்பட்டோம் என்பதை அறிந்தேன். அந்த ஒரு படம் தான் எனக்கு வந்து நான் மிஸ் செய்த படம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது படத்தை விஜய் சாரை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்காக பலரிடம் கதை கேட்டு வருகிறோம். கதை செட் ஆனதும் நிச்சயமாக படத்தை துவங்குவோம். விஜய் அண்ணாவுடன் படம் பண்ணுவதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்


