வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதால், மனமுடைந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கனரா வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் குழு கடனில் முறைகேடு:
வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், 16 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைவியாக உள்ளார் (இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டு வருகிறார்). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வேலூர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி கிளை மூலம் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

விதிகளின்படி, குழுவில் உள்ள 16 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.1,25,000 பிரித்து வழங்கப்பட வேண்டும். ஆனால், கௌசல்யா குழுவில் உள்ள சில உறுப்பினர்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்பவருக்கும் தனக்குச் சேர வேண்டிய கடன் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார்:
தனக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்காதது குறித்து சர்மிளா வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வங்கி நிர்வாகம் கெடுபிடி – தீக்குளிப்பு முயற்சி:
இந்நிலையில், கடன் தொகையை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று கனரா வங்கி நிர்வாகம் சார்பில் சர்மிளாவிற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சர்மிளா, “நாங்கள் வாங்காத கடனுக்கு நாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?” என்று கூறி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி எதிரே தனது இரண்டு குழந்தைகளுடன் திடீரென பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் விசாரணை:
அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் சுதாரித்துச் செயல்பட்டு, சர்மிளாவைத் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். பின்னர் அவரை மீட்டு வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளிர் குழு கடன் முறைகேடு காரணமாக தாய் தனது பிஞ்சுக் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
