அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்தப்படாமல் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவருக்குச் சிக்கல்:
கடந்த 2025-2026 ஆம் கல்வியாண்டில் ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்’ கீழ் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (National University of Malaysia) ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு, நடப்புக் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தை அரசிடமிருந்து செலுத்துவதில் கடும் தாமதமும் அலட்சியமும் நிலவி வருகிறது.

இங்கிலாந்தில் புதிய விதிமுறைகளால் பாதிப்பு: ஏற்கனவே, இங்கிலாந்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்புக்காக விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு, “மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது; இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற புதிய விதியை அந்நாட்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
“கல்வி உதவித்தொகை வழங்கும் அமைப்புகள் இடையிலேயே நிதியை நிறுத்திவிட்டால், மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் சூழல் உருவாகிறது” என இங்கிலாந்து கல்வி நிறுவனங்கள் இதற்கான விளக்கமாகத் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டுச் சேர்க்கைகளில் உருவாகும் அச்சம்:
மலேசியாவில் பயிலும் மாணவருக்கு உரிய நேரத்தில் கட்டணத்தை விடுவிக்காமல் தவெக அரசு தாமதிப்பதால், எதிர்காலத்தில் இங்கிலாந்தைப் போலவே மலேசியாவிலும் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்கப் பல்கலைக்கழகங்கள் மறுக்கும் அவல நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதலமைச்சருக்கு வலியுறுத்தல்:
அரசின் உதவித்தொகையைக் மட்டுமே முழுமையாக நம்பி கடல் கடந்து சென்று பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய தாமதங்கள் பேரதிர்ச்சியையும் கடுமையான மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, தமிழக அரசு தனது அலட்சியப் போக்கைக் கைவிட்டு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிலும் அனைத்துத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் நிலுவையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!
