- Advertisement -
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் தமிழ்நாடு கல்லூரி கல்வித் துறை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி
கடந்த ஆகஸ்ட் 17, 2026 அன்று கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க பள்ளி கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்ப்பும், உத்தரவு வாபஸும்

இந்தச் சுற்றறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மாணவர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளதாக இந்திய மாணவர் சங்கம் (SFI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை அறிவித்தன. போராட்டத்தில் பங்கேற்காமல் மாணவர்களை தடுக்க முயல்வது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, கல்லூரி கல்வித் துறை இணை இயக்குநர் சிந்தியா செல்வி (Cynthia Selvi P) பிறப்பித்த புதிய உத்தரவில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படாது
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்படுவதைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும், இதுதொடர்பான முந்தைய சுற்றறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!
