கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்துத் தமிழகச் சட்டப்பேரவையில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து விமர்சனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அமைச்சர்களின் பதில்கள்: துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்காமல், அமைச்சர்கள் திசைதிருப்பும் வகையிலேயே பதிலளித்து வருகின்றனர்.
அரசியல் லாபம்: நேரலையில் வெளிப்படும் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடகக் ‘கன்டெண்ட்’-களுக்குப் பயன்படுமே தவிர, மக்களுக்கு எந்தவிதப் பயனும் தராது. பேரவையில் பேசப்படும் அருவருக்கத்தக்கப் பேச்சுகளைப் பதிவிலிருந்து நீக்குவது, “குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”.
முதல்வரிடம் எழுப்பப்படும் கேள்விகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மேகேதாட்டு பிரச்சினை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது மற்றும் பாலாறு பிரச்சினைகள் குறித்துத் தமிழக முதல்வர் விஜய் என்ன பேசினார் என்பது குறித்துச் சட்டப்பேரவையில் அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
