பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதம் ஆகியவற்றால் தமிழ்நாடு கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விவசாய நிலங்கள் காய்ந்து கருகி வருவது ஒருபுறமிருக்க, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது.


மாநிலத்தின் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவருவது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல் நினோ தாக்கம்!
உலகளவில் ஏற்பட்டுள்ள தீவிர பருவநிலை மாற்றமும், பசிபிக் பெருங்கடலில் உருவான ‘எல் நினோ’ (El Niño) மற்றும் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வுகளும் தெற்காசியப் பருவமழைக் கட்டமைப்பை முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளன.
வெப்ப அலைகள் அதிகரித்து, வளிமண்டல ஈரப்பதம் குறையும் என இந்திய மற்றும் சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் ஏற்கனவே தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன. இத்தகைய சூழலியல் நெருக்கடியை முன்கூட்டியே உணர்ந்து, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிடத் தவறியதன் விளைவே இன்றைய கடுமையான வறட்சிக்கு முக்கியக் காரணமாகும்.
காவிரி டெல்டாவில் கருகும் பயிர்கள்..!
நீர்வளத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் உள்ள 14,141 நீர்நிலைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் பயனளிக்கும் வகையில் தண்ணீரே இல்லை. குறிப்பாக, காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாத அவல நிலை நிலவுகிறது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறுவை சாகுபடி பரப்பு 2 லட்சம் ஏக்கராகச் சுருங்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் கருகிவிட்டன.
வரவிருக்கும் சம்பா சாகுபடிக்கான பணிகளைத் தொடங்குவதற்குக் கூட வழியின்றி விவசாயிகள் தவிக்கின்றனர். நடப்பாண்டில் சம்பா சாகுபடி பரப்பளவு கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் உள்ளதால், சுமார் 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் என்று கணிக்கப்படுகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
ரூ.2,000-க்கு விற்கப்படும் லாரி தண்ணீர்!
காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் வறட்சியின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் முற்றிலுமாக வற்றிவிட்டன. கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.
பயிர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில் விவசாயிகள் தனியாரிடம் இருந்து லாரி தண்ணீர் வாங்கிப் பாய்ச்சும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு லாரி தண்ணீரின் விலை ரூ.2,000-க்கு மேல் விற்கப்படுகிறது. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், வீடுகளிலும் போர்களில் தண்ணீர் இல்லாமல் போனதால், அன்றாடக் குடிநீர்த் தேவைக்கு பொதுமக்கள் லாரி, கேன் தண்ணீருக்கு ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாத வருமானத்தில் பெரும் பகுதி தண்ணீருக்கே செலவாகும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
தமிழகத்தில் நிலவும் இந்த அபாயகரமான சூழலைச் சுட்டிக்காட்டி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிதியுதவியும், பயிர்க்கடன் தள்ளுபடியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீர் செறிவூட்டலும்!
வெள்ளக் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரைச் சேமிக்க முறையான கட்டமைப்பு இல்லாததும், நீண்டகாலமாக மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் செல்ல முக்கியக் காரணங்களாகும். முந்தைய திமுக ஆட்சியில், ஏரிகள், கண்மாய்கள், வரத்துக் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி ஆழப்படுத்தாமல் விட்டது நீர் மேலாண்மையின் பெரும் பின்னடைவாகும். நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊரகப் பகுதிகள் தோறும் மழைநீர் செறிவூட்டும் உறிஞ்சுக் கிணறுகள் மற்றும் தடுப்பணைகளை அமைப்பது மட்டுமே எதிர்காலப் பஞ்சத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
அவசரச் செயல் திட்டம் தேவை!
தமிழகத்தில் நிலவும் இத்தகைய மோசமான குடிநீர் மற்றும் விவசாய நெருக்கடியைச் சமாளிக்க, நமது கடந்த 11-ஆம் தேதியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி, “தமிழ்நாடு நீர்ப்பாதுகாப்பு மற்றும் வறட்சித் தடுப்பு அவசரச் செயல் திட்டத்தை” அரசு உடனடியாக அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதியைப் பெறுவதற்கு ஏதுவாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பதுடன், கிராமப்புறங்கள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை முறைப்படுத்துதல், ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாருதல், போர்க்கால அடிப்படையில் லாரிகள் மூலம் விலையின்றி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தாவிட்டால், தமிழகம் மிக மோசமான குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும். அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விழித்துக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.
புதிய அரசின் 100 நாள் ஆட்சி மற்றும் அரசியல் சூழல் – மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து!
