இந்தியாவின் அணு ஆயுத இருப்பு குறித்த முக்கியத் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ்’ (Federation of American Scientists – FAS) என்ற பிரபல ஆராய்ச்சி மையம் தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் அணு ஆயுத இருப்பு – 190 ஆக உயர்வு: அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி:
இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்காக 160 அணு ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணு ஆயுதங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் மொத்த அணு ஆயுத இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தைச் சேமித்து வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை விட அதிகளவு அணு ஆயுதங்கள்: சமீபத்திய தரவுகளின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவின் அணு ஆயுத பலம் அதைவிட அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவிடம் 2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என மொத்தம் 9 வெவ்வேறு வகையான அணு ஆயுத ஏவுதல் அமைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 2 புதிய நவீன ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளதாகவும், அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணு உலையின் முக்கிய பங்கு: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ‘துருவா’ அணு உலையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்குச் சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239-ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்குச் சுமார் 35 புதிய அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
