தமிழில் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தான் வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள் இருப்பதாகச் சாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகிற்கு மீண்டு வரும் பிபாஷா பாசு
நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின் ‘பாரபங்கி’ எனும் வெப் தொடர் மூலம் பிபாஷா பாசு திரைத்துறையில் மீண்டும் தடம் பதித்து வருகிறார். நடிப்பைத் தாண்டித் தனது உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர், ஊட்டச்சத்துக்காகப் பயன்படுத்தும் புரோட்டீன் பவுடரை அண்மையில் வாங்கியுள்ளார்.

புரோட்டீன் பவுடரில் புழுக்கள்: பிபாஷா பாசு அதிர்ச்சி வீடியோ
தான் வாங்கிய புரோட்டீன் பவுடர் டப்பாவைத் திறந்தபோது, அதற்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிபாஷா பாசு, அதனைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட புரோட்டீன் பவுடரின் பிராண்ட் பெயர் மற்றும் அதிலிருந்த புழுக்கள் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பதிவில் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) ஆணையர் துக்காராம் முண்டேவைக் குறிப்பிட்டு அவர் விடுத்துள்ள கோரிக்கையில்:

“துக்காராம் முண்டே அவர்களே, நீங்களே எங்களது ஒரே நம்பிக்கை. பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் கெட்டுப்போன அல்லது கலப்படமான பொருட்கள் கிடைக்காமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.” — நடிகை பிபாஷா பாசு
உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எதிர்பார்ப்பு
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அதிரடிச் சோதனைகளை நடத்தி, தரமற்ற பொருட்கள் விற்பனைக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரி துக்காராம் முண்டேவிற்கு ஏற்கெனவே ப்ரீத்தி ஜிந்தா, ட்விங்கிள் கண்ணா போன்ற பல முன்னணி பாலிவுட் நடிகைகளும், அம்மாநில மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், பிரபல நடிகை பிபாஷா பாசுவே நேரடியாகத் தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற புரோட்டீன் பவுடர் குறித்து ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருப்பது அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’: நாளை வெளியாகிறது டிரெய்லர்!
