மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


பள்ளிக்கு அருகே ஏற்பட்ட தீ
புகாவு நகரில் உள்ள உஜமா தொடக்கப் பள்ளி மற்றும் அதனை ஒட்டியிருந்த பள்ளிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை மாணவர்கள் வகுப்புகளில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருந்த ஒரு வீட்டில் தொடங்கிய தீ, அடுத்தடுத்து பள்ளிகளுக்கும் பரவியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பிக்க முயன்ற மாணவர்கள்
தீ வேகமாக பரவியதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற முயன்றனர். குறுகலான வழியாக அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்தும் தப்பிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெரிசலில் சிக்கியும், புகையை சுவாசித்தும் பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 குழந்தைகள் உயிரிழப்பு
தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள அதிகாரிகளின் தகவலின்படி, இந்த தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 7 சிறுவர்களும் அடங்குவர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் காரணமாக மருத்துவப் பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
தீ பள்ளிகளுடன் அருகிலிருந்த அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மரங்களால் கட்டப்பட்டிருந்த சுமார் 300 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் என்ன?
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாவு நகரம் தற்போது M23 ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தீ விபத்தைத் தொடர்ந்து தேசிய துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவம் காங்கோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கோவில் கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா! 7,022 பேருக்கு பாதிப்பு – 3,398 பேர் பலி
