தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்குத் தடை கோரித் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், சாதிப் பெயர்களை நீக்கித் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சமூக நீதி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமானது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி
கடந்த 2025ஆம் ஆண்டு, தமிழக முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு புதிய பெயர்களைச் சூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது. ஆதி திராவிடர் காலனி, வண்ணான்குளம் போன்ற பெயர்களை மாற்றி, 2025 நவம்பர் 19க்குள் புதிய பெயரிடும் பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, பெயர்களை மாற்றுவது நடைமுறையில் பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2025ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆரம்பத்தில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நீதிபதிகளின் அதிரடி உத்தரவு மற்றும் கருத்துகள்
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் பல்வேறு முக்கியக் கருத்துகளை முன்வைத்தனர்:
மனதில் சாதி உள்ளவர்களுக்கே குழப்பம்: தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவதால் குழப்பம் ஏற்படும் என்ற வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “மனதளவில் சாதிப் பெயர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களின் மனதில் தான் குழப்பம் இருக்குமே தவிர, மனதிலிருந்து சாதியை நீக்கியவர்களின் மனதில் எந்தக் குழப்பமும் இருக்காது” .
பொருத்தமான மாற்றுப் பெயர்கள்:
செங்கல்பட்டில் ‘ஹரிஜன் காலனி’ என்பது ‘திருவள்ளுவர் காலனி’ என்றும், ‘வண்ணார் ஏரி’ என்பது ‘கொன்றை ஏரி’ என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் கம்பர், பாரதிதாசன், அவ்வையார், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், பேரறிஞர் அண்ணா மற்றும் நேர்மைக்குப் பெயர்பட்சமான முன்னாள் அமைச்சர் கக்கன் போன்ற பொதுமக்களால் மதிக்கப்படும் நடுநிலையான ஆளுமைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த மாற்றுப் பெயர்களின் மீது எந்தவிதமான சர்ச்சையும் எழுப்ப முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை:
சில இடங்களில் உள்ள தற்போதைய பழைய பெயர்களை வெளிப்படையாகப் பேசக்கூட முடியாத அளவுக்கு அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இந்த நடவடிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அரசு இத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
விடுபட்ட பெயர்களையும் நீக்க உத்தரவு
தமிழக அரசின் இந்த அரசாணை சமூக நீதி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமானது என்று பாராட்டிய நீதிபதிகள், இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை எனக் குறிப்பிட்டுள்ளனா்.
மேலும், தமிழகத்தில் விடுபட்ட பிற பகுதிகளிலும் சாதிப் பெயர்களைக் கண்டறிந்து அதனையும் நீக்குவதற்குத் தகுந்த கூடுதல் அரசாணையை வெளியிடுமாறு அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
