Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம்: தவெக அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த மீனவர்கள்!

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம்: தவெக அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த மீனவர்கள்!

-

- Advertisement -

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மீனவ மக்களுக்குப் பட்டா வழங்கக் கோரியும் சென்னை ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணூர் முதல் கோவளம் வரையிலான பல்வேறு மீனவ கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இதில் திரளாகக் கலந்துகொண்டனர்.

we-r-hiring

மீனவர் சங்கங்களின் முக்கியக் கோரிக்கைகள்:

  • அரசாணை ரத்து: சென்னை பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை எண்: 654-ஐ அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

  • பட்டா வழங்கிடக் கோரிக்கை: மெட்ராஸ் சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் (CIT) மூலம் ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் மற்றும் முள்ளி நகர் மக்களுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும்.

  • புதிய வீடுகள்: சீனிவாசபுரம், பட்டுமேடு, நம்பிக்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள வீடுகளை அகற்றிவிட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய வீடுகளைப் போர்க்கால அடிப்படையில் கட்டித் தர வேண்டும்.

5 நாட்கள் கெடு – தீவிர போராட்ட எச்சரிக்கை!

போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஒட்டுமொத்த மீனவர் சங்கங்களின் போராட்டக் குழு நிர்வாகி விஜய்:

“தலைமைச் செயலக திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏற்கனவே அவகாசம் அளித்திருந்தோம். இதுவரை அரசிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனவே, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மீண்டும் 5 நாட்கள் கெடு விதிக்கிறோம். இதற்குள் அரசாணையைத் திரும்பப் பெறாவிட்டால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் உள்ள மீனவ கிராமங்களில் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு, மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.

“திரையில் ஒன்று, தரையில் ஒன்று!” – காளியம்மாள் ஆவேசம்

போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக நிர்வாகி காளியம்மாள் தெரிவித்ததாவது:

“கடற்கரையின் பூர்வகுடி மக்களின் நிலத்தைப் பிடுங்கி புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது அதிகாரத்தின் உச்சகட்டம். திரைப்படங்களில் ‘நான் மீனவன்’ என்று நடித்துவிட்டு, ‘சுறா’ படத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட அகற்ற முடியாது எனப் பேசியவர்கள், நிஜ வாழ்க்கையில் அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள்.

திரையில் ஒன்று, தரையில் ஒன்று என வாழ்வது வாழ்க்கை அல்ல. நிழல் பட கதாநாயகனை நிஜ கதாநாயகனாக நம்பிய மக்களின் நிலத்திலேயே கால் வைக்க முடியாத நிலையை அரசு உருவாக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கவில்லை என்றால், ‘கடல் கடலாளிக்கே சொந்தம்’ என்ற முழக்கத்துடன் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.”

போராட்டக் களத்தில் பரபரப்பு:

ஆர்ப்பாட்டத்தின் போது 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தின் இடையே மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காரசாரம்! 4 வாரங்களுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு!

MUST READ