Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!

மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், மின் கணக்கீட்டில் தாமதம், கட்டணக் கணக்கீட்டில் குளறுபடிகள், மின் கட்டணம் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தில் ‘பீடர் டிரிப்’ ஏற்படும் நேரங்களில், துணை மின் நிலையங்களில் போதுமான ஆப்ரேட்டர்கள் இல்லாததால் மின்தடை ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மின் கணக்கீட்டாளர் பணியிடங்களில் போதிய ஆட்கள் இல்லாததால், மின் நுகர்வோருக்கு கணக்கீடு மற்றும் கட்டணங்கள் தொடர்பான புகார்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கையில், மின்துறையில் 53,575 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் 20,449 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இதில் கணக்கீட்டாளர் பணியையும் மேற்கொள்ளக்கூடிய பல்நோக்கு கள உதவியாளர்கள் 12,500 பேரும், மின் தொழில்நுட்ப உதவியாளர்கள் 945 பேரும் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்களை நியமிப்பதற்கு பதிலாக, மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட டெண்டர் முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மின்துறை போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்கும் நிர்வாக முயற்சியாக அமையும் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு மின்சார வாரியம் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, துணை மின் நிலையங்களில் சுமார் 1,800 ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 250 இரண்டாம் நிலை இளநிலைப் பொறியாளர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிதாக நிறுவப்பட உள்ள துணை மின் நிலையங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்குள் 945 காலியிடங்கள் நிரப்பப்படும் என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் சுமார் 600 தொழில்நுட்ப உதவியாளர்களை முதலில் அந்தப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களுக்கு பணி அனுபவம் இருப்பதால், தற்போதைய நடைமுறைச் சிக்கல்களை திறம்பட கையாள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு அரசு மின்துறையில் நிரப்ப முடிவு செய்துள்ள 945 ஆப்ரேட்டர் பணியிடங்களில், உள்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய் மாமன் ஸ்தானத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்.. புறப்படும் போது பெண் கேட்டவுடன் மறுக்காமல் செல்ஃபி எடுத்துக்கொடுத்த முதலமைச்சர் விஜய்!

MUST READ