Homeசெய்திகள்கட்டுரைகர்நாடக அரசு மேகதாட்டுவில் அணை கட்ட தீவிர முயற்சி! – தமிழக முதல்வர் அனைத்து கட்சி...

கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணை கட்ட தீவிர முயற்சி! – தமிழக முதல்வர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து தடுத்து நிறுத்த சிபிஐ(எம்) வற்புறுத்தல்!

-

- Advertisement -

காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கும்படி ஒன்றிய நீர்ப்பாசன துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர் ஆணையம் விரைவாக ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

we-r-hiring

தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் அனுமதி வழங்கிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு இதுவரை வழங்கியதில்லை. இதை ஒன்றிய அரசும் கண்டுகொள்வதில்லை. மாறாக, அபரிமிதமான மழை பெய்து உபரி நீரை திறந்து விடும் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மேகதாட்டு அணை கட்டினால், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகும். இதனால் குடிதண்ணீர் மற்றும் பாசனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பது சரியல்ல. எனவே, தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும்.

முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குழு பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியினை தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டின் காவிரி மீதான உரிமையை நிலைநாட்டிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

த.வெ.க. வேட்பாளருக்கு எதிராகக் கொதித்தெழும் மக்கள்; தேர்தல் களம் தெரியாமல் திணறும் அமைச்சர்கள்!” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடிப் பேட்டி

MUST READ