Homeசெய்திகள்தமிழ்நாடுதிருடப்பட்ட 32 பட்டுச்சேலைகள் கூரியரில் வந்ததால் இன்ப அதிர்ச்சி – ஆரணி வியாபாரிக்கு நேர்ந்த வினோத...

திருடப்பட்ட 32 பட்டுச்சேலைகள் கூரியரில் வந்ததால் இன்ப அதிர்ச்சி – ஆரணி வியாபாரிக்கு நேர்ந்த வினோத சம்பவம்!

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வியாபாரியின் கடையில் திருடப்பட்டதாக கூறப்பட்ட 32 விலை உயர்ந்த பட்டுச்சேலைகள், சில நாட்களுக்குப் பிறகு கூரியர் மூலம் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் 4 பெண்கள் உள்பட 6 பேர் அவரது கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் விலை உயர்ந்த பட்டுச்சேலைகளை பார்த்துவிட்டு, குறைந்த விலையில் சில சேலைகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு கடையில் இருந்த விலை உயர்ந்த பட்டுச்சேலைகள் சில காணாமல் போனதை குமார் கவனித்துள்ளார்.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடைக்கு வந்த பெண்கள் பட்டுச்சேலைகளை திருடிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக குமார் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, இந்த திருட்டு சம்பவம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருடப்பட்டதாக கூறப்பட்ட 32 பட்டுச்சேலைகளும் கூரியர் மூலம் வியாபாரி குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பார்சலை பிரித்துப் பார்த்தபோது தனது கடையில் இருந்து திருடப்பட்ட பட்டுச்சேலைகள் அதில் இருந்ததை கண்டு குமார் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூரியர் பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் தேடுதல் நடவடிக்கைக்கு பயந்து திருட்டில் ஈடுபட்டவர்களே பட்டுச்சேலைகளை மீண்டும் கூரியரில் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மின் புகார்களை இனி WhatsApp மூலம் தெரிவிக்கலாம்! – ‘TNEB CHATBOT’ புதிய வசதி அறிமுகம் 24×7 செயல்படும் வசதி – 94987 94987 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்

MUST READ