Homeசெய்திகள்இந்தியாவாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்களை உடனடியாக தொடங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

we-r-hiring

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR நடவடிக்கையின் முதல் கட்டம் பீகாரிலும், அடுத்த கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றது. 3-வது கட்டத்தில் மீதமுள்ள மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் நிறைவடைந்துள்ளன.

SIR முடிந்த பகுதிகளில், முந்தைய வாக்காளர் பட்டியலை தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒப்பிட்டு, முன்பு பெயர் இருந்தும் தற்போது பட்டியலில் இடம்பெறாதவர்களை கண்டறிய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பின்னர் அவர்களின் தற்போதைய நிலையை அறிய வீடு வீடாக சென்று விசாரணை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தால், அவர்களிடம் படிவம் 6 விண்ணப்பத்தைப் பெற்று மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களையும் இந்த சிறப்பு நடவடிக்கையில் சேர்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் வாரத்திற்கு சுமார் 20 முதல் 25 வாக்காளர்களை சரிபார்த்து, இந்தப் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மைக்காக தயாரிக்கப்படும் பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போன தகுதியான வாக்காளர்களுக்கு மீண்டும் பெயரை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு தொடர்ந்து நடைபெறும் நடைமுறை என்பதால், தகுதியானவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக்டோபர் 10-ல் டெல்லியில் போராட்டம் – அபிஜித் தீப்கே அறிவிப்பு!

MUST READ