நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடித்த ‘தேவரா: பார்ட் 1’ படத்தின் ‘சுட்டமல்லே’ பாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் AI மார்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசல் பாடலில் இல்லாத வகையில் டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த விவகாரம் குறித்து ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு பெண்ணை அவமதிக்கும் வகையில் உள்ளடக்கம் உருவாக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மார்பிங் வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் அதை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜூனியர் என்டிஆர் எச்சரித்துள்ளார். “உங்களில் யாரையும் விடமாட்டேன்” என்று அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், இதுபோன்ற வீடியோக்களை யாரும் பார்க்கவோ, பகிரவோ அல்லது அதனுடன் தொடர்புடைய பதிவுகளில் ஈடுபடவோ வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று மற்றொருவரை குறிவைக்கும் இதுபோன்ற AI உள்ளடக்கம், நாளை யாரையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிய கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்றும் ஜூனியர் என்டிஆர் வலியுறுத்தியுள்ளார். இதே விவகாரத்தில் ஜான்வி கபூரும் AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை உருவாக்கவோ, பகிரவோ வேண்டாம் என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
‘சுட்டமல்லே’ பாடல் 2024-ம் ஆண்டு வெளியான ‘தேவரா: பார்ட் 1’ திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்திருந்தனர். தற்போது இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்ட போலி AI வீடியோ விவகாரம் மீண்டும் AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்கு தயாராகும் டைகர் முத்துவேல் பாண்டியன் – ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் வெளியீடு அறிவிப்பு!
