Homeசெய்திகள்உலகம்பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் அரசின் புதிய முயற்சி: அரசு ஊழியர்களுக்காக ‘FirstDate’ டேட்டிங் ஆப்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் அரசின் புதிய முயற்சி: அரசு ஊழியர்களுக்காக ‘FirstDate’ டேட்டிங் ஆப்!

-

- Advertisement -

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், திருமணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்காக ‘FirstDate’ என்ற புதிய டேட்டிங் மற்றும் மேட்ச்மேக்கிங் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

சிங்கப்பூர் அரசு தொழில்நுட்ப நிறுவனம் (GovTech) சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டம், 21 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத அரசு ஊழியர்களுக்காக தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. Singpass மூலம் பயனர்களின் வயது, திருமண நிலை மற்றும் அரசு பணியாளர் தகுதி சரிபார்க்கப்படுகிறது.

பொதுவாக பிரபலமான டேட்டிங் ஆப்களில் ஏராளமான நபர்களின் சுயவிவரங்களை பார்த்து ‘ஸ்வைப்’ செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ‘FirstDate’ முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. இதில் ஒரு நேரத்தில் ஒரே ஒரு பொருத்தமான நபர் மட்டுமே பரிந்துரைக்கப்படுவார்.

பயனர்கள் தங்களது விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, மதிப்புகள் மற்றும் உறவு தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் Gale-Shapley Stable Marriage Algorithm எனப்படும் கணித முறையை பயன்படுத்தி பொருத்தமான ஜோடிகள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஒரு ஜோடி பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டதும், இருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு இருவரும் 72 மணி நேரத்துக்குள் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள விருப்பம் தெரிவிக்க வேண்டும். இருவரும் சம்மதித்தால் மட்டுமே அவர்களின் தொடர்பு விவரங்கள் பகிரப்படும்.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து வருகிறது. 2025-ல் அந்நாட்டின் குடியிருப்பாளர்களுக்கான மொத்த கருவுறுதல் விகிதம் 0.87 ஆக குறைந்தது. அதே ஆண்டில் குடிமக்கள் பிறப்புகளின் எண்ணிக்கையும் 26,071 ஆக இருந்தது.

மேலும், திருமணம் செய்யும் வயதும் அதிகரித்து வருகிறது. 2025-ல் சிங்கப்பூர் குடிமக்களின் முதல் திருமணத்திற்கான சராசரி வயது ஆண்களுக்கு 30.8 ஆகவும், பெண்களுக்கு 29.1 ஆகவும் இருந்தது. இதுபோன்ற மக்கள் தொகை மற்றும் பிறப்பு விகித சவால்களுக்கு மத்தியில் ‘FirstDate’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தற்போது ஒரு சோதனைத் திட்டமாக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என GovTech தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேரை கொன்ற முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை – டிரம்ப் ஒப்புதல்!

MUST READ