செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சில மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும், அதே நேரத்தில் அதன் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மன் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் அளித்த பேட்டியில், ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறுவதற்காக சில ஆபத்துகளை சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று சாம் அல்ட்மன் கூறினார். ஏஐ பொதுமக்களுக்கு பரவலாகக் கிடைப்பதும், அதை பயன்படுத்துவதில் மக்களுக்கு சுதந்திரம் இருப்பதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
ஏஐ மூலம் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை தான் ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பெரிய அளவிலான ஹேக்கிங், ஏஐ-யின் தவறான பயன்பாடு, மோசடி உள்ளிட்ட சில எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஏஐ மூலம் மக்கள் செய்யக்கூடிய நன்மைகள், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சாம் அல்ட்மன் கூறியுள்ளார்.
ஏஐ கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓபன் ஏஐ மற்றும் அதன் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிகவும் சக்திவாய்ந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஒரே நிறுவனமோ அல்லது ஒரே ஆய்வகமோ கட்டுப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை என்றும் அல்ட்மன் கூறினார்.
அதே நேரத்தில், ஏஐ மூலம் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் சாம் அல்ட்மன் எச்சரித்துள்ளார். மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ கைப்பற்றுவது அல்லது மிகப்பெரிய அதிகாரம் ஒரே நபர், நிறுவனம் அல்லது நாட்டின் கைகளில் குவிவது போன்ற ஆபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அவரது முந்தைய எச்சரிக்கைகளும் இதனுடன் தொடர்புடையதாக உள்ளன.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவது தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், சாம் அல்ட்மனின் இந்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
சரித்திர சாதனை: உலகின் முதல் ‘டிரில்லியன் டலர்’ அதிபராக அரியணை ஏறினார் எலான் மஸ்க்!
