6 மாவட்டங்களில் சேதமடைந்த வீடுகள், சாலைகள், மயானங்களைச் சீரமைக்கக் கோரிய வழக்கு – விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள், சாலைகள் மற்றும் மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்க தமிழக அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

6 மாவட்டங்களில் சேதமடைந்த அடிப்படை வசதிகள்
புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சேதமடைந்த நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சேதங்களின் தன்மையை வகைப்படுத்தி, அவற்றைச் சீரமைப்பதற்கான உரிய அரசுத் திட்டங்களை அடையாளம் கண்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
மேலும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
பராமரிப்பது குறித்தும் விழிப்புணர்வு அவசியம் – நீதிபதிகள் கருத்து
இந்தப் பொதுநல வழக்கை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் பூர்ணிமா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பின்னர், அவற்றைப் பராமரிப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு இருப்பதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், தனிநபர் ஒழுக்கம் அவசியம் என்றும், அரசு அமைத்துக் கொடுத்த வசதிகளைப் பாதுகாத்துப் பராமரிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தமிழக அரசுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
அரசால் செய்து கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்காக ஏதேனும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதா? அத்தகைய திட்டம் இருந்தால் அதன் விவரங்கள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அரசின் பதில்மனுவின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வகையில் உத்தரவிட்டனர்.
