வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவுக்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் இரண்டு விமானங்களும் என மொத்தம் நான்கு விமானச் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புறப்படும் 2 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவுக்குப் புறப்படவிருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லவிருந்த இண்டிகோ பயணிகள் விமானமும், இரவு 7.05 மணிக்கு சென்னையில் இருந்து விஜயவாடா செல்லவிருந்த இண்டிகோ பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்களும் ரத்து
இதேபோல், விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய இண்டிகோ விமானமும், விஜயவாடாவில் இருந்து இரவு 10.05 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், சென்னையில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகளும், ஆந்திராவில் இருந்து சென்னை வரவிருந்த பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய விமானச் சேவைகள் குறித்து எதிர்பார்ப்பு
அர்னாப் புயல் ஒடிசா மாநிலத்தையும் பாதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஒடிசாவுக்குச் செல்லும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்களின் சேவைகள் குறித்தும் இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை. புயலின் காற்றின் வேகம் மற்றும் வானிலை நிலவரத்தைப் பொறுத்து நாளைய விமானச் சேவைகள் தொடர்பான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக விமானப் பயணத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டு பயணத்தைத் திட்டமிடுவது அவசியமாகும்.
ஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: நாளை கரையை கடக்கிறது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
