Homeசெய்திகள்மாவட்டம்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் – பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் – பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன்!

-

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

we-r-hiring

இடைத்தேர்தல் களத்தில் சீமான்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

இதற்கிடையே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொகுதியின் இடைத்தேர்தல் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

நவம்பர் மாத இறுதியில் தமிழக முதலமைச்சரின் அரசு முறை நிகழ்ச்சி அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தரும்போது, அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்குப் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்ற இடங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அகஸ்தியர்பட்டியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஏற்கனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின்போது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பொதுக்கூட்டங்களுக்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெண்டைக்காயை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் போராட்டம்! கிலோ ரூ.5-க்கு கூட விலை கிடைக்காததால் வேதனை

MUST READ