சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும், இதில் கமிஷன் பேரம் பேசப்படுவதாகவும் தமிழக வெற்றிக் கழக அரசின் மீது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.


சட்டம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தனியார்மயமாக்கல் முயற்சிகள் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும் இனிப்பு வழங்குவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும் கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பு – குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவு!
2021–2026 திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்ததாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக இல்லாமல், கைதிகள் திருந்தி வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும், தண்டனை சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பொருளாதாரம் ஈட்டவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், கைதிகளால் நடத்தப்படும் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களும், சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் ‘பிரிசன் பஜார்’ நிலையங்களும் சிறைத்துறை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறைவாசி ஒருவர் மாதம் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் ரூ.12,000 வரை வருமானம் ஈட்டி, தனது குடும்பத்திற்கு அனுப்பும் சூழல் உருவானதாகவும், குடும்பத் தலைவன் சிறையில் இருந்தாலும் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வேலைவாய்ப்புகள் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ.13 கோடி வருவாய் ஈட்டிய பெட்ரோல் நிலையங்கள்!
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்பட்ட விற்பனை நிலையங்கள், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டியதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.13 கோடி வருவாயும், பிரிசன் பஜார் விற்பனை நிலையங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயும் ஈட்டி, தமிழக அரசு, சிறைத்துறை நிர்வாகம் மற்றும் சிறைவாசிகளுக்கு பொருளாதார ஆதாரமாக விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்குப் போட்டியாக வசூலிலும் வருவாயிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்த விற்பனை நிலையங்கள், தற்போதைய சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாருக்கு தாரைவார்க்க முயற்சியா?
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சிறைத்துறை மூலம் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையங்களைத் தனியாருக்கு ஒப்படைக்க முயற்சி நடப்பதாகத் தகவல் கசிந்துள்ளதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக, தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகள் மூலம் நடத்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு இறைச்சி மற்றும் சிறைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து மற்ற விற்பனை நிலையங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மூடி, இறுதியில் அவற்றைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயைத் தனியாருக்கு தாரைவார்த்து, அதில் கமிஷன் அடிப்பதற்கான கணக்கு ஓடிக்கொண்டிருப்பதாகவும், ‘மக்கள் பணத்தைத் தொடமாட்டோம்’ என்று வீராவேசமாகப் பேசிவிட்டு, கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கமிஷன் அடிப்பதுதான் தவெக அரசின் தாரக மந்திரமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தனியார்மயமாக்கலுக்கு பொதுவுடமைத் தோழர்கள் ஆதரவு அளிப்பார்களா?
எந்தத் துறையிலும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயைத் தனியாருக்கு தாரைவார்ப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு தனிக்கவனம் செலுத்துவதாக ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
சிறைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொருட்கள் விற்பனை நிலையங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை பொதுவுடமைத் தோழர்கள் வரவேற்கப் போகிறார்களா அல்லது ஆதரிக்கப் போகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கைதிகள் தப்பியோட்டத்தைச் சாக்காக வைத்து தனியார்மயமாக்கலா?
கைதிகள் தப்பிச் செல்கிறார்கள் என்ற வாதத்தைச் சாக்காக வைத்து அமைச்சர் கலெக்ஷன் குமார் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டத்துறையில் ஆடு மேய்ப்பவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கியது, மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41-க்கு கொள்முதல் செய்வது போன்ற விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது சிறைத்துறையில் தனியாருடன் லாபி அமைத்து கலெக்ஷன் நடைபெறுகிறதா என மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ரீல்ஸ் மூலம் ஆட்சி நடத்த முடியுமா?
எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரீல்ஸ் மூலமாக ஆட்சி நடத்திவிடலாம், மக்களை ஏமாற்றிவிடலாம், பொய்யான வதந்திகளைப் பரப்பிவிடலாம் எனத் தவெக அரசு தவறான கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதாக ரகுபதி விமர்சித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தற்போது விழா நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவின்போது திமுகவினர் இனிப்பு வழங்கியதை காவல்துறையினர் தடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும் இனிப்பு வழங்குவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும் கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு துவக்க விழாக்களை நடத்திவிட்டுச் செல்லும் ரீல்ஸ் ஆட்சியாகவே தவெக அரசு இருப்பதாக ரகுபதி விமர்சித்துள்ளார்.
வெறும் ரீல்ஸ் மூலமாகவே ஐந்தாண்டு காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று கருதும் தவெக அரசுக்கு, வரவிருக்கும் ஐந்து தொகுதி இடைத்தேர்தல்களிலும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
