
வரவிருக்கும் இடைத்தேர்தல்களை இலக்காகக் கொண்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்துப் பத்திரிகையாளர் ஜென்ராம் தனது ஊடக வாயிலாக விரிவாக விவாதித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு திட்டங்களைத் திறப்பதும், அரசியல் ஆதாயம் தேடுவதும் ஜனநாயக அறத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை திறப்பு விழாவும் காவல்துறை சர்ச்சையும்!
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நவீன உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்காக முதல்வர் விஜய் வருகை தந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜென்ராம் , இப்பணிகள் கடந்த ஆட்சிக்காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டு முடிக்கப்பட்டவை என்று விமர்சனங்கள் எழுவதைக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இது குறித்து இனிப்புகள் வழங்க முயன்ற திமுகவினரிடமிருந்து தட்டுகளைக் காவல்துறை பறித்துச் சென்ற நிகழ்வு , ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டினார் .
தேர்தல் ஆதாயமும் வரிப்பணச் செலீடும்!
விரைவில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் , புதுக்கோட்டை, கரூர், ஈரோடு (பெருந்துறை) மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளை மையமாகக் கொண்டு முதல்வர் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அரசியல் ரீதியாக விவாதப் பொருளாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பு அரசு நிகழ்ச்சிகளை நடத்துவது சட்டப்படி குற்றமல்ல என்றாலும் , பொதுமக்களின் வரிப்பணத்தை தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக ஆளுங்கட்சிகள் பயன்படுத்துவது எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனநாயக அறமும் சம வாய்ப்பும் (Level Playing Field):
”சட்டத்தின் எழுத்து வடிவத்தை (Letter of the Law) மட்டும் பார்ப்பதா அல்லது அதன் ஆன்மாவை (Spirit of the Law) உணர்ந்து செயல்படுவதா?” என்று கேள்வி எழுப்பிய ஜென்ராம் , ஆளுங்கட்சிகளுக்கு எப்போதும் அமைப்பு ரீதியான சில அட்வாண்டேஜ்கள் (Structural Advantages) இருப்பது இயல்பு என்றாலும் , தங்களை ‘தூய சக்தி’ என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் இத்தகைய நடைமுறைகளில் கூடுதல் அறநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
இறுதி எஜமானர்கள் மக்களே!
சட்டரீதியான இடைவெளிகளைப் பயன்படுத்தி ஆளுங்கட்சிகள் செய்யும் இது போன்ற முன்னெடுப்புகளைத் தாண்டி, நுண்ணிய அரசியல் சூழல்களைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்கும் முதிர்ச்சியை மக்கள் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலங்களில் உணர்ச்சிகரமான விஷயங்களுக்கு அப்பால், இதுபோன்ற நிர்வாக முறைகளையும் கவனித்து மக்கள் உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படையாகும் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்
