Homeசெய்திகள்வானிலைநவம்பர் 13-ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு –...

நவம்பர் 13-ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

-

- Advertisement -

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் நவம்பர் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

நவம்பர் 10-ஆம் தேதியான இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை நவம்பர் 11-ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 12 முதல் 16 வரை மழை எச்சரிக்கை!

நவம்பர் 12-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 13-ஆம் தேதி கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 14-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 15-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நவம்பர் 16-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளில் நவம்பர் 10 முதல் 14-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, குறிப்பிட்ட நாட்களில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MUST READ