அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பின்பற்றாமல், தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஊபர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில், கால் டாக்ஸி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடக் குறைவான கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஊபர் நிறுவன அலுவலகம் அருகே ஓட்டுநர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கட்டணத்தை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை – வெற்றிவேல்
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:
தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு கடந்த 14 ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், தற்போது ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பின்பற்றுவதில்லை.
அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி ஒரு பயணத்துக்கு ரூ.250 வசூலிக்கப்பட வேண்டிய நிலையில், ஊபர் நிறுவனம் ரூ.180 எனக் கட்டணம் நிர்ணயிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அரசு நிர்ணயிக்கும் கட்டணமும், தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணமும் வேறுபடுவதால் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடக் குறைவாகக் கட்டணம் நிர்ணயிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கால் டாக்ஸி கட்டணம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும்
ஆட்டோ கட்டணத்தைவிட கால் டாக்ஸி கட்டணம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது முக்கியக் கோரிக்கை என வெற்றிவேல் தெரிவித்தார்.
ஒரே நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களுக்குப் பெர்மிட் வழங்கப்படுவதாகவும், இதனால் தனிப்பட்ட முறையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இந்தக் கட்டணப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் கணக்குகள் முடக்கம்?
ஊபர் நிறுவனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் 200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வெற்றிவேல் குற்றம்சாட்டினார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நிறுவன நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவற்றின் செயல்பாடுகளைத் தங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தனியார் நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய முடியாவிட்டால், மாநிலப் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கைகள் என்ன பயன் அளிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆட்டோவுக்கு ரூ.25; ஏசி காருக்கு ரூ.17 – சுடர்வேந்தன் குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய உரிமைக்குரல் ஓட்டுநர்கள் சங்க மாநிலத் தலைவர் சுடர்வேந்தன், தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தின்படி ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் ஊபர் நிறுவனம் ஏசி காருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.17 மட்டுமே கட்டணமாக நிர்ணயிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ‘எகனாமி’, ‘ஆட்டோ சேவர்’ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் குறைந்த கட்டணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இதனால் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடையே வருமானப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
கால் டாக்ஸி கட்டணத்தை ஆட்டோ கட்டணத்தைவிட 40 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாளை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் திட்டம்
காவல்துறையின் அறிவுறுத்தலின்படி இன்று நிறுவன அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்துவதாகவும், நாளை ஊபர் நிறுவன அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் வெற்றிவேல் தெரிவித்தார்.
ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி கட்டணங்களை அரசு முறையாக முறைப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் கூறினார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
