2025-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 13) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

17 வீரர்களுக்கு அர்ஜுனா விருது
இந்த ஆண்டு 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், தடகள வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி, செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், செஸ் வீரர் விதித் குஜராத்தி, ஹாக்கி வீரர் ராஜ்குமார் பால், கபடி வீராங்கனை பூஜா உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
மேலும், பேட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், படகோட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு எந்த வீரரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது
இந்திய கால்பந்து விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மூத்த வீரரும் பயிற்சியாளருமான ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ஐந்து பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது
விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் சாதிக்கப் பயிற்சி அளிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஐந்து பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
வழக்கமான பிரிவில் பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா நந்தகுமார் சவான் ஆகியோரும், வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் தர்மேந்திர சிங் யாதவ், வீரேந்திர குமார் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
ஆர்மி பாராலிம்பிக் நோடுக்கு தேசிய விருது
விளையாட்டை ஊக்குவிப்பதிலும், மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக புனேவில் உள்ள ஆர்மி பாராலிம்பிக் நோடு அமைப்புக்கு ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
மேலும், பல்ஜீத் கவுர், ரிமோ சாஹா உள்ளிட்ட நான்கு பேருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டுத் துறை செயலாளர் ஹரி ரஞ்சன் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழா சுமார் 36 நிமிடங்கள் நடைபெற்றது.
