இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் நாட்டோ (NATO) அமைப்பின் முக்கிய ராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், ரஷ்யாவுக்கு ரகசியத் தகவல்களை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.


இங்கிலாந்தின் குளூசெஸ்டர் நகருக்கு அருகே அமைந்துள்ள நாட்டோவின் விரைவு அதிரடிப் படை தலைமையகத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட பல்வேறு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் பணியாற்றி வருகின்றனர்.
உளவு நடவடிக்கை தொடர்பாக விசாரணை
இந்த ராணுவத் தலைமையகத்தில் இருந்து முக்கியத் தகவல்கள் ரஷ்யாவுக்குப் பரிமாறப்படுவதாக பிரிட்டன் உளவுத்துறையான எம்.ஐ.5 எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அங்கு பணியாற்றி வந்த 41 வயதுடைய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க வீரர் கைது
பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அந்த வீரரைக் கைது செய்ததாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மின்னணு சாதனங்கள் ஆய்வில், முக்கிய ராணுவத் தகவல்களை ரஷ்யாவுக்கு ரகசியமாக அனுப்பியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் சின் ஸ்டின்சன், முக்கியத் தகவல்களைக் கையாளும் பொறுப்பில் உள்ள ஒருவரின் இத்தகைய செயல், உள்நாட்டு அச்சுறுத்தல்களின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் பட்டேலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மறுப்பு
இதற்கிடையே, இந்தக் கைது நடவடிக்கைக்கும் ரஷ்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டோவின் முக்கிய ராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய அமெரிக்க வீரர் மீது எழுந்துள்ள உளவு குற்றச்சாட்டு, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.
பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் ராணுவ நடவடிக்கை: 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்!
