பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் வரம்பின்றி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.


அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதலைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பக்ரைனில் அமெரிக்க ரேடார் மீது தாக்குதல்
இதற்கிடையே, தற்காப்பு நடவடிக்கை எனக் கூறி ஈரானின் கெஷ்ம் தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், பக்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைக் குறிவைத்துத் தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஈரானின் சிரிக் நகரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இதுகுறித்து ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொள்வதாகக் கூறப்படும் வான்வழி ஆத்திரமூட்டல்களையும் எண்ணெய் கடத்தலையும் நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்கள் மீண்டும் தொடர்ந்தால், வரம்பின்றி பதிலடி கொடுக்க ஈரான் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் படை முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பக்ரைனில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ள நிலையில், ரேடார் மீதான தாக்குதல் குறித்த ஈரானின் அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
