தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் ‘அசுரன்’ திரைப்படத்தில் தொடங்கி இட்லி கடை, கர போன்ற கிராமத்துப் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதோடு பெரும்பாலான படங்களில் தனது உண்மையான வயதை விட அதிக முதிர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘ஓம்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷுடன் பணியாற்றிய அனுபவத்தையும், இப்படத்தில் தனுஷை எப்படி ஒரு புதிய கோணத்தில் காட்ட முயற்சித்துள்ளார் என்பதையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.
தனுஷின் ஆளுமை குறித்துப் பேசிய அவர், “தனுஷ் சார் உண்மையில் 40-களின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான். இன்றைய காலகட்டத்தில் 40 வயது என்பதே புதிய 30 வயது என்றுதான் சொல்வார்கள். ஆனால், நான் அவரிடம் பேசும்போது ஒரு வித்தியாசமான உணர்வைப் பெறுவேன். அவர் பேசும் விதம், விவாதிக்கும் விஷயங்கள் மற்றும் மற்றவர்களைப் பார்க்கும் பார்வை ஆகியவை 55 வயது மதிக்கத்தக்க ஒருவரின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்கும். இதை நான் மிகச் சிறந்த நேர்மறையான அர்த்தத்தில்தான் சொல்கிறேன். அவரிடம் உலகத்தைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலும் அறிவும் உள்ளது,” என்று வியந்துள்ளார்.
மேலும், தனுஷின் எளிமையான மற்றும் ஆச்சரியமான குணத்தைப் பகிர்ந்த இயக்குநர், “தன்னை விட வயதில் மிகவும் மூத்தவர்களிடம் பேசும்போது கூட, அவர் இயல்பாக அவர்களை ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். தான் அவர்களை விட வயதில் சிறியவர் என்பதையே அவர் உணரமாட்டார். இதைத்தான் மக்கள் ‘ஓல்ட் சோல்’ என்று அழைப்பார்கள். இந்த மாற்றம் அவருக்குள் எப்போது நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. 18 அல்லது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டதாலோ, அல்லது வாழ்க்கையில் பல அனுபவங்களையும் கஷ்டங்களையும் கடந்து வந்ததாலோ அவர் மிக இளம் வயதிலேயே முதிர்ச்சியடைந்துவிட்டார் போல்,” என்று தெரிவித்துள்ளார்.
தனது புதிய படத்தில் தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பு குறித்துக் குறிப்பிட்ட அவர், “இத்தனை நாட்களாக அவர் சுமந்து வந்த அந்த முதிர்ச்சியான இமேஜ் மற்றும் அழுத்தத்திலிருந்து அவரைச் சற்று விலக்கி, அவருக்குள் இருக்கும் துடிப்பான இளைஞனை வெளிக்கொண்டு வர விரும்பினேன். திரையில் எப்போதும் ஒரு இளமைத் துள்ளலும் புத்துணர்ச்சியும் அவரிடம் வெளிப்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது,” என்று கூறியுள்ளார்.
