சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பணிபுரிந்து வந்த 30 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்ட நிர்வாகிகளை அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மது போதையில் வந்த இருவர்:
கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 30 வயதுடைய பெண் ஒருவர் வரவேற்பாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அவர் வழக்கம்போல் பணியில் இருந்தபோது, அந்த விடுதிக்கு மது போதையில் இரண்டு பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப் பெண்ணிடம் இருவரும் தவறான உறவுக்கு அழைத்ததாகவும், அவர்களது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பெண் அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணிடம் அத்துமீறியதாகப் புகார்
ஆனால், அந்தப் பெண்ணை இருவரும் தடுத்து நிறுத்தி, அவரது ஆடைகளைக் கிழிக்க முயன்றதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்:
சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், புகாரில் குறிப்பிடப்பட்ட இருவரும் பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, விடுதியில் விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபுகுமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் தகவல்:
மேலும், கைது செய்யப்பட்ட பிரபுகுமார் தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி சென்னை மத்திய மேற்கு மாவட்ட இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமானதா?
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு, விடுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
