வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் கடந்த 6 மணி நேரமாக ஏறத்தாழ ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 20-ஆம் தேதி நண்பகலில் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மிகத் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவில் புயல்:
இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்வான் புயல் வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
மேலும், விசாகப்பட்டினத்துக்குத் தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்குத் தெற்கே 790 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக வலுப்பெறும்:
தற்போது ஏறத்தாழ ஒரே இடத்தில் நீடிக்கும் அக்வான் புயல், தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17-ஆம் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பர் 19-ஆம் தேதி காலை மிகத் தீவிர புயலாக உருவெடுக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நவம்பர் 20-இல் ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்பு:
மிகத் தீவிர புயலாக வலுப்பெறும் அக்வான், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20-ஆம் தேதி நண்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளுக்கு இடையே, நெல்லூர் – துனி இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்:
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அவ்வப்போது அதன் வேகம் மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலின் நகர்வு மற்றும் தீவிரம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
