HomeBreaking Newsஉச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு – மலை முழுவதும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்கு...

உச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு – மலை முழுவதும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்கு எதிர்ப்பு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலைப்பகுதி தொடர்பான விவகாரத்தில், மனுதாரர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு – மலை முழுவதும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்கு எதிர்ப்பு!

கோயிலையும் மலையையும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும், கோயிலில் உள்ள கல்தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்ற வேண்டும், கார்த்திகை திருநாளன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

we-r-hiring

மனுவைத் தள்ளுபடி செய்ய அறநிலையத்துறை கோரிக்கை

திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் நிலையில், கோயிலையும் மலைப்பகுதியையும் முழுமையாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனத் துறையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் பூஜைகள், ஆராதனைகள் மற்றும் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான உரிமை கோயில் நிர்வாகத்துக்கு உரியது என்றும், எனவே மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் துறைக்கு நிர்வாக உரிமை இல்லை

கோயிலின் உரிமையாளராக கோயில் நிர்வாகமும், சட்டப்பூர்வ நிர்வாகப் பொறுப்பை இந்து சமய அறநிலையத்துறையும் கொண்டுள்ளதாகப் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறைக்கு கோயிலின் நிர்வாகத்தில் அத்தகைய பங்கு இல்லை என்றும், கோயிலையும் மலையையும் தொல்லியல் துறை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை மனுதாரர் மீண்டும் எழுப்பியுள்ளதாகவும், அதனை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் அறநிலையத்துறை தனது மனுவில் கூறியுள்ளது.

24 மணி நேரமும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்கு எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள கல்தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கோயிலில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறைகளில் இடம்பெறாத ஒன்று என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. எனவே, முற்றிலும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தக் கோரும் இந்த வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மலை முழுவதும் தீபம் ஏற்றவும் எதிர்ப்பு

கார்த்திகை திருநாளன்று மலை முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலைப்பகுதி முழுவதும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முரணானது எனப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருகில் தர்கா அமைந்துள்ளதையும், மதரீதியான பதற்றங்கள் தொடர்பான வரலாற்றைக் கொண்ட உணர்வுப்பூர்வமான பகுதி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அறநிலையத்துறை, இத்தகைய கோரிக்கைகள் அப்பகுதியின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது.

 

MUST READ