Homeசெய்திகள்தமிழகத்தில் 16.72 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை – ரூ.6.37 கோடியில் ‘இரும்பு கண்மணி’...

தமிழகத்தில் 16.72 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை – ரூ.6.37 கோடியில் ‘இரும்பு கண்மணி’ திட்டம்: அரசாணை வெளியீடு!

-

- Advertisement -

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை பாதிப்பைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் ‘இரும்பு கண்மணி’ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 16.72 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை – ரூ.6.37 கோடியில் ‘இரும்பு கண்மணி’ திட்டம்: அரசாணை வெளியீடு!

2026-27 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மொத்தம் 16 லட்சத்து 72 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகளுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இவர்களில் 8 லட்சத்து 77 ஆயிரத்து 964 பேர் மாணவிகள்; 7 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர் மாணவர்கள். இப்பரிசோதனை மற்றும் தொடர் மருத்துவ நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 823 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் (RBSK) மருத்துவக் குழுக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்படும் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு செய்து, தேவையான சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். கூடுதல் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் மாணவர்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

‘Test – Treat – Talk – Track’ என்ற நான்கு கட்ட அணுகுமுறையின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, முதலில் பரிசோதனை செய்வது, பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, தேவையான ஆலோசனைகளை வழங்குவது, பின்னர் அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது என நான்கு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மத்திய அரசின் ‘ரத்தசோகை இல்லாத இந்தியா’ (Anaemia Mukt Bharat) திட்டத்தின் வாயிலாக இதற்காக ரூ.6 கோடியே 37 லட்சத்து 43 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மேற்பார்வையில் ‘இரும்பு கண்மணி’ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே ரத்தசோகை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

கல்விக்கான ரூ.5,000 கோடிக்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை – மத்திய கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

MUST READ